மாமியார் தினம்
அன்னையர் நாள், தந்தையர் நாள் என்பதைப் போல மாமியார் நாளும் முதன்முதலாகக் கொண்டாடப்பட்டது, 1934 ஆம் ஆண்டில். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள அமரில்லோ நகரில் உள்ளூரில் வெளியாகும் செய்தித்தாளான அமெரில்லோ குளோப் நியூஸின் ஆசிரியர் ஜீன் ஹோவ் (சட்டெனத் தோன்றுவதைப் போலவே இவர் பெண்மணி அல்ல, ஆண்தான்) என்பவரின் முன்முயற்சியால் முதன்முதலில் மாமியார் தினம் கொண்டாடப்பட்டது.
அன்னையர் நாளைப் போலவே திட்டமிடப்பட்டு, முதன்முதலில் மார்ச் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டாலும், அதன் பிறகு, அப்போதைய சூழ்நிலைகளைப் பொருத்து வெவ்வேறு நாள்களில் கொண்டாடப்பட்டு வந்தது. பிற்காலத்தில் மாமியார் தின விழாக் குழுவொன்று அமைத்து ஒவ்வோர் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமியார்களுக்குப் பரிசுகள் எல்லாம்கூட அளிக்கப்பட்டு வந்திருக்கிறது.
ஐக்கிய நாடுகள் அவை அல்லது உலகளாவிய முகமைகள் அல்லது அமைப்புகள் அறிவிப்பதற்கு மாறாக, 1970-களில் அமெரிக்கப் பூங்கொத்து வணிகர்கள் அமைப்புதான் அக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை மாமியார் தினமாகக் கொண்டாடுவதென அறிவித்தனர். அப்போதிருந்து இந்த நாளில் மாமியார் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment