காற்றழுத்த தாழ்வு மண்டலம் ௭ன்றால் ௭ன்ன?
பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் வெப்பத்தால் கடல் நீர் சூடாகிறது. இதனால் ஆவியாகும் நீர், கடலின் மேற்பரப்பில் சூழ்ந்துள்ள காற்றுடன் கலக்கிறது. இந்த சூடான ஈரக்காற்று, செங்குத்தாக நேர் மேலே செல்கிறது. கடலின் மேற்பரப்பில் இருந்த பெரும்பாலான காற்று மேலே சென்று விடுவதால், அந்த இடத்தில் குறைவான காற்றே மீதம் உள்ளது. இதனால், அந்த வளிமண்டலப் பகுதியில் காற்றழுத்தம் குறைகிறது.
இந்தக் குறை அழுத்தத்தை நிரப்ப, அதன் சுற்றுப் பகுதியில் உள்ள வளி மண்டலக் காற்று சுழன்று விரைகிறது. இவ்வாறு, மேலே சென்று தங்கும் சூடான ஈரக் காற்று, குளிர்ந்து, நீர்த்திவலைகள் உறைந்த மேகமாகிறது . இந்த மேகமானது, காற்றுடன் சேர்ந்து சுழல்கிறது.இப்படித் தொடர்ந்து, ஏற்படும் நீராவிப்போக்கால் அந்தப் பகுதியை மையமாகக் கொண்டு பெரிய அளவில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகிறது. அதற்கேற்றபடி, இந்தக் குறை அழுத்தப் பகுதியை நிரப்ப, வலிமையான காற்று தேவைப்படுகிறது. இந்தக் காற்று, குறை அழுத்த மையப் பகுதியைச் சுற்றிச் சுழன்று அதி வேகத்துடன் சென்று, அந்தப் பகுதியை நிரப்ப முயலுகிறது.
காற்றின் வலிமை அதிகரித்துக் கொண்டே செல்வதால், அது புயலாக மாறுகிறது. இதனால் தான் இந்த சுழலும் மேகக்கூட்டங்கள், செயற்கைக் கோள் படத்தில் வட்டமான துளை கொண்ட மையப் பகுதியை உடைய மேகச் சுருள் போல் காட்சி அளிக்கிறது. இந்த வட்டமான மையப் பகுதிக்கு கண் என்று பெயர்.
புயலின் கண் பகுதியென்பது அதன் மையத்திலிருக்கும் மிதமான காற்றழுத்தப் பகுதி. இது, சுமார் 30 - 65 கி.மீ விட்டம் கொண்டிருக்கக் கூடும். அங்கு நிலவும் காற்றழுத்தம் வெளிப்புறத்தில் இருப்பதைவிடக் குறைத்தே காணப்படும். காற்று மேலெழுந்து, பின் குளிரும் நிலையினில் சில அடர்த்தியான காற்று கீழ் நோக்கி நகர்ந்து தெளிவான புயலின் கண் பகுதி உருவாகும்.
அதிக வலுக்கொண்ட புயலின் மையப்பகுதி அடர்ந்த உருளை வடிவில் தோற்றமளிப்பதால் அது புயலின் கண் எனப்படுகிறது.இந்தச் சுழலும் மேகக் கூட்டத்தை உள்ளடக்கிய காற்று, நகர்ந்து கரையை அடையும் போது, நிலப் பகுதியை சூறாவளிப் புயலுடன் கூடிய மழையாகத் தாக்குகிறது. நிலத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் போது இந்தப் புயல் காற்று வலுவிழக்கிறது.
No comments:
Post a Comment