வேண்டியதைத் தேர்ந்தெடு
ஆதிமனிதன் படிப்படியாக நாகரீக வளர்ச்சி அடைந்து வேளாண்மையில் ஈடுபட்ட பிறகு தனக்கு வேண்டிய தாவர வகைகளையும், விலங்கினங்களையும் தன் மனப்போக்கின் படி தெரிவு செய்து தேர்ந்து எடுத்துக் கொண்டான். இத்தகைய தெரிந்தெடுத்தல் முறையால் தான் தானாக அடர்ந்து வளர்ந்த வனங்களில் வளர்ந்து வந்த மூலாதாரத் தாவரங்களிலிருந்து 'காலிபிளவர்', 'முட்டைக்கோஸ்' முதலிய இனங்களை மனிதன் உண்டாக்கினான். இதே முறையில் பிராணி வகைகளைத் தெரிந்தெடுத்தலாகவும் பின்பற்றப்பட்டது
நாய்களில் ஏறத்தாழ 112 வகைகள் மனிதனால் தெரிந்தெடுத்தல் வகையில் உண்டாக்கப்பட்டது. நமது சட்டைப் பையில் போட்டுக்கொண்டு பவனி வரக்கூடிய மிகச் சிறிய நாய் முதல் 10 வயதுப் பையன் சவாரி செய்யக் கூடிய 'கிரேட் டேன்' என்ற இனத்து நாய்கள் வரை வகை வகையாக இவற்றில் அடக்கம். ஆஸ்திரேலியாவிலுள்ள 'குவின்ஸ்லாந்தில்' நாய் வளர்ப்பவர் எட்டாண்டுகள் பெரும் முயற்சி செய்து சிறு நாய் ஒன்றை ஒருவர் கலப்பினமாக உருவாக்கித் தெரிந்தெடுத்துள்ளார். முழு வளர்ச்சி அடைந்த பின்னும் இந்த நாய் /4 கிலோ எடையும், 7 செ.மீட்டர் உயரமும், 20 செ.மீ. நீளமும்தான் இருக்கின்றது.
கிழக்கும் மேற்கும்
நமது இந்திய நாட்டிற்கும் மேற்கே உள்ள அமெரிக்க நாட்டிற்கும் இடையேயுள்ள தூரம் சுமார் 7000 மைல்கள். கிழக்கே ஜப்பான் நாடு நம்மைவிட சில ஆயிரம் மைல்கள் தள்ளி இருக்கின்றன. சுருங்கச் சொன்னால் அமெரிக்காவின் மேற்கிலுள்ள அலாஸ்கா உலகின் மையத்திலுள்ள இந்தியர்களாகிய நமக்கு மேற்கு முனையிலும், ஜப்பான் நாடு நமது கிழக்கு முனையிலும் அமைந்துள்ளது. அவ்வாறாயின் இந்த அமெரிக்காவின் அலாஸ்கா முனைப் பகுதியும், கிழக்கே ஜப்பான் நாடும் ஒன்றுக்கொன்று சுமார் 10 அல்லது 12 ஆயிரம் மைல் தூரத்தில் அல்லவா இருத்தல் வேண்டும். ஆனால் அதுதான் கிடையாது
இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 30 அல்லது 40 கிலோ மீட்டர் அளவுதான்! இன்னுமா புரியவில்லை? பூமி உருண்டை வடிவம் என்று நாம் படித்த அடிப்படை பூகோளத்தை நினைத்துப் பாருங்கள் கொஞ்சம். இந்தவிதமாக சிந்தித்தால் கிழக்கும், மேற்கும் சந்தித்துதானே ஆக வேண்டும்.
பிள்ளையார் பிடிக்கப் போய் வேளாண்மை சம்பந்தப்பட்ட ஆய்வுகள் கடந்த நூறு ஆண்டுகளாகத்தான் மிக்க முன்னேற்றத்தை அடைந்து வருகின்றன. இவற்றுள் சில ஆய்வுகள் உணவுப் பஞ்சத்தை ஒழிக்கும் வகையில் ஒட்டுப்பயிர் இனங்களைப் புதிதாக உண்டாக்க வழி செய்தது.
இரு வேறுபட்ட பயிர்களின் இரண்டு வேறுபட்ட பாகங்கள் பலன் தரும்போது, அவற்றை இணைத்து ஒட்டுப் பயிராக ஒரே செடியை உண்டாக்கி அதன் மூலம் இரு பலன்களையும் பெற தீவிர முயற்சி நடந்தது. இதன்படி 70 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க மாநில விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இலைப் பகுதி உணவாக உதவும் முட்டைக்கோசையும் வேர் பாகம் உண்ணுவதற்கு ஏற்றதாக முள்ளங்கிப் பயிரையும் கலந்து ஒரு புதிய ஒட்டுப்பயிரை உண்டாக்கினார்கள்.
தாவர இயலார்களால் 'ரபானஸ் ஸடைவஸ் என்ற பெயரால் அழைக்கப்படும் முள்ளங்கிக்கும். 'பிராஸிகா ஒலிரேஸி' எனப் பெயர்பெற்ற கோஸ் தாவரத்துக்கும் கலப்பினமாகப் பிறந்து 'ரபானோ பிராஸிகா' என்ற கலப்புத் திருநாமம் பெற்ற அப்புதிய ஒட்டுப்பயிர், விஞ்ஞானிகளுக்குத் தந்தது மிகப் பெரிய அதிர்ச்சியே யாகும். ஏனெனில் அப்புதியச் செடி, இலைகளுக்குப் பதிலாக கோஸ் தாவரத்தின் வேர்களும், இலைகளுக்குப் பதிலாக முள்ளங்கிச் செடியின் இலைகளும் இடம் பெற்றிருந்ததே காரணம். முள்ளங்கி இலையும், கோஸின் வேரும் ஆக இரண்டுமே பயன்அற்ற பகுதிகளாயிற்றே. 'பிள்ளையார் பிடிக்க அது குரங்காய் முடிந்தது' எனும் கதை இதுதானோ!
செடிக்குள்ளே சிப்பாய்கள்
இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களின் செயல்கள் பற்றிய அடிப்படை உண்மை நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. அது மனித உடலுக்குள் ஒரு காவல் படையைப் போல பணிபுரிந்து வியாதிகளை நமக்கு ஏற்படுத்தும் நுண் கிருமிகளை நோயின் துவக்கத்திலேயே அழித்துவிடுகிறது. போராடி
பிராணிகளின் உடலிலும் மனிதர்களைப் போன்ற இந்த தற்காப்புச் செயல் நடைபெறுவதுண்டு. இத்தகைய சிப்பாய் பொருட்கள் செடி கொடிப் பயிர்களிலும் உள்ளன என்ற பேருண்மை சமீப ஆண்டுகளாக அறியப்பட்டு வருகின்றது. உருளைக்கிழங்கில் துவங்கி பட்டாணி, அவரை, துவரை, பயறு போன்ற நாம் உண்ணும் பல வகை தாவரப் பொருட்களிலும் இதுபோன்ற சிப்பாய் பணிபுரியும் காப்புப் பொருட்கள் உள்ளன என்பது படிப்படியாகக் கண்டு பிடிக்கப்பட்டு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. 1979-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக் கழக தாவர இயல் ஆய்வுக்கூடத்தில் இப்பொருட்கள் கால்நடைத் தீவனப் பயிர்களிலும் நிறைந்து இருப்பதை ஒரு கல்லூரி பேராசிரியர் கண்டறிந்துள்ளார். இத்தகைய பொருட்கள் இரசாயனப் பண்புகளை உடையதாகும். இவை 'பைட்ரோ அலக்சின்' என்ற விஞ்ஞானப் பெயரால் அறியப்படுகின்றன.
ஆணுக்கோர் நீதி பெண்ணுக்கோர் நீதி
குழந்தைகள் வளரும்போது ஆண்பால், பெண்பால் வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சிகள் பலவும் நடத்தப்பட்டன. ஒரு குழந்தையின் அடிப்படை வளர்ச்சியானது உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி என்ற இரு பெரும் பிரிவாக அறிந்து கணக்கிடப்படுகின்றது. இருதயம், நுரையீரல் போன்ற உடல் உள் உறுப்புகளின் வளர்ச்சி விகிதம் ஆண் மற்றும் பெண் குழந்தைகளில் சற்றே மாறுபடுகிறது.
சிறு வயதிலேயே ஆண் குழந்தைகளின் இதயம் அதே வயதுடைய பெண் குழந்தை ஒன்றின் இதயத்தைவிட அளவில் சற்று பெரிதாகவே இருக்கும். ஆனாலும் 9 முதல் 14 வயதைக் கடக்கும்போது பெண் குழந்தையின் இதய அளவு ஆண் குழந்தையின் இதய அளவை விட அதிகரித்து விடுகின்றதாம். ஆனால் 14 வயதுக்குப்பிறகு ஆண் ஒருவனின் இதயம் பெண்ணின் இதயத்தைவிட அதிக வேகத்தில் வளருவதோடு பெண் உடலில் இதய வளர்ச்சி மிக மந்தமாக, படிப்படியாகக் குறைந்த நிலையை அடைகிறது. இரத்தக் குழாய்களின் வளர்ச்சி, இரத்த அழுத்தம் இவற்றிலும் ஆண், பெண்ணைவிட வேக நிலையை அடைந்து விடுகிறான்.
ஆனால் பிரித்தறிதல், புரிந்துகொள்ளுதல், பேசுதல் போன்ற மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட நிலைகளைப் பொறுத்தவரை ஆண் மற்றும் பெண் குழந்தைகளிடம் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டு விடுவதில்லை. 4 வயதுக்குப் பின்னர் பேசுகின்ற வார்த்தைகளின் எண்ணிக்கையில் மட்டும் சிறிய மாற்றங்கள் ஏற்படுவதாக குழந்தை உளவியலார்கள் அறிந்து வெளியிடுகின்றனர். உதாரணமாக 4 வயது ஆண் குழந்தை சுமார் 5,600 அடிப்படை வார்த்தைகளைத் தெரிந்துகொள்ளும் நிலையடைகிறது. ஆனால் பெண் குழந்தை 5,500 அடிப்படைச் சொற்களையே அச்சமயம் கையாளுகின்றன. பிறகு இந்த நிலை 10 வயதில்தான் மாற்றம் அடைகிறது. அப்போது ஆண் குழந்தைகள் தெரிந்து வைத்துக்கொள்ளும் அடிப்படை வார்த்தைகள் 34,300 ஆகவும், அதே வயதில் பெண் குழந்தை ஒன்று 34,500 வார்த்தைகளை கையாள்வதாகவும் தெரிய வருகிறது. இறுதியாக ஒரு வார்த்தை -மேலுள்ள கணக்கீடு ஒரு சராசரி மதிப்பேயாகும். சூழ்நிலைக் காரணங்களால் இம்மதிப்பீடு மாறலாம்.
சித்த இரகசியம்
ஒவ்வெரு மனித மனத்தின் அடித்தளத்து ஆசையும் தனது இறுதிப் பயணமான சாவிற்கு உரிய நாளை முடிந்தவரைத் தள்ளிப் போட்டுக் கொண்டபடியே வாழவேண்டும் என்பதுதான்' என்பதில் ஐயமில்லை. கல்ப மருத்துவம் என்ற பழங்கால சித்த வைத்தியம் நீண்ட ஆயுளுக்கு வழி சொல்வதாகக் கூறுகிறார்கள். சான்றாகச் சித்தர்கள் மனித உடலின் எப்பாகத்திலும் வரக்கூடிய கொடிய புற்றுநோய்க்கு வைத்தியமாக இரத்தத்தின் இரசாயனக் கூறுகளை சுத்திகரிக்கச் செய்ய வேண்டும் என்கின்றனர். உடலில் எல்லாப் பகுதிகளிலும் ஏற்படும் புற்றுநோய்க்கு இத்தகைய வைத்தியம் நவீன ஆங்கில முறை வைத்தியத்தில் சிபாரிசு செய்யப்படவில்லை. ஆனால் சித்த வைத்திய முறை மிக விசித்திரமானது.
இங்கு ஒரு குறிப்பிட்ட வகை மருத்துவத் தைலத்தை தலைவலியினைக் குணப்படுத்தவென்று கால்களில் தடவச் சொல்லுகின்றனர். கண் நோய் சரியாக கை விரல்களின் நகக்கண்களில் எண்ணெய் ஒன்றை விடச் சொல்லி வைத்தியம் செய்கின்றனர் சித்தர்கள். இம்முறை நவீன மருத்துவர் பலராலும் அங்கீகரிக்கப்படுவதில்லை. ஆனால் சித்த வைத்தியர்களோ நோய் வரும் காரணங்களும், நோயின் வீரியமும், குணமாகும் வகையும் மனித உடலின் ஜீவ நரம்புகளைப் பொறுத்தது என்கின்றனர். ஒருவனது புஜங்களில் வீக்கமும், வலியும் ஏற்பட்டால் அப்பாதிப்பு அம்மனிதனின் பற்களில் சீழ் பிடித்து இருப்பதாலும் ஏற்படலாம் என்கின்றனர். இத்தகைய பாதிப்புகளின் காரணம் உடல் முழுவதும் வலைபோலப் பரவியுள்ள ஜீவ நரம்புகளே என்கின்றனர் சித்தர்கள்.
இந்த நரம்புப் போக்குவரத்து மண்டலத்தின் மூலமான கேந்திர இடம் எதுவென்று நினைக்கிறீர்கள்? அது மூளையாகவோ, அல்லது முதுகுத் தண்டாகவோதான் இருக்க வேண்டும் என்று நாம் கற்ற விஞ்ஞான அறிவு நமக்குக் கூறுகிறது. இல்லவே இல்லை' என்கிறார்கள் சித்தர்கள். பின் அந்த கேந்திர
ஸ்தானம்தான் எது ? அது எந்த இடம்? சித்தர் பாடல்களில் வரும் 'சுழுமுனை' என்ற அந்த இடம் இரு புருவங்களின் மத்தியப் பகுதியல்லாமல் வேறில்லை.
நரம்பு மண்டலத்தின் 8 கேந்திரங்களின் மூலமாக மனிதன் எட்டு பெரிய அற்புதச் சக்திகளை அடக்கி ஆளலாம் என்கின்றனர்சித்தர்கள். அவையாவன :
1) அனிமா - உடலின் பாரத்தை அறவே குறைத்து ஒரு நுண் அணுவின் அளவாக மாற்றும் சக்தி. மஹிமா-உடல் அளவற்ற பேருருவத்தை அடைதல்.
(2) மஹிமா - உடல் அளவற்ற பேர் உருவத்தை அடைதல்
3) கரிமா - நினைத்த காரியத்தை அடைய எண்ணங்களை மறந்து செயல்படுதல். லஹிமா- பளுவற்ற உடலைச் சிறகுபோல் ஆக்குதல்.
4) லஹிமா - பளுவற்ற உடலை சிறகு போல் ஆக்குதல்
5) பிராப்தி - கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் உணர்தல்.
6) பிரஹாமியம் - இறவா நிலை அடைதல்.
7) ஈசத்துவம் அனைத்துக்கும் தலைமைப் பேறு அடைதல்.
8) வசித்துவம் - விரும்பியதை அடைதல். இவற்றையே 'அஷ்டமா சித்திகள்' என்கின்றனர்.
தற்போது வேகமாகப் பரவிவரும் சீனர்களின் 'அக்யூபஞ்சர்' வைத்திய முறையில் தலைவலி மாறாமல் தொடர்ந்தால் முதுகுத் தண்டுப் பகுதியில் சில ஊசிகளை சிறிது நேரம் செருகி குணப்படுத்தி விடுகின்றனர். இது அன்றைய நாள் சித்தர் முறை போன்றதே. சித்தர்களின் வழிகள் நவீன விஞ்ஞானம், உளவியல் இக்கலைகளுக்கு பல இடங்களில் ஒத்துச் செல்லுகின்றன. நவீன காலத்தும் சித்தர்களின் வைத்தியமுறை, யோகாசன முறை போன்றவை நன்குப் பரவி வருகின்றன. ஏன் என்றால் சித்தர்களின் அடிப்படைச் சித்தாந்தம் அடிப்படை நவீன விஞ்ஞானத்தை பலவிதங்களில் ஒற்றுமைப்படுத்துகின்றன. ஆங்கில முறைகள் பலரறிந்த இரகசியம். சித்த இரகசியங்கள் சிலரே அறிந்தது.
பசியும் ருசியும்
மாமிசம் உண்ணுபவர்கள் குறிப்பாக செம்மறி ஆட்டின் மாமிசத்தை அதிகம் விரும்புவதில்லை. வெள்ளாட்டின் மாமிசத்தையே ஆவலுடன் உண்ணுகிறார்கள். இதை ருசிக்காக என்று வைத்துக் கொண்டாலும் வெள்ளாட்டுக் கறியை உண்பவர்களுக்கு அதிக அளவிலான தழைப் புரதமும், சில சமயங்களில் மூலிகைச் சத்தும் கூடக் கிடைக்கின்றன. வெள்ளாடு தரையில் புல் மேய்வதோடு மட்டுமின்றித் தழைகளையும், செடிகளின் தாழ்ந்த இலைகளையும் கூட இரு கால்களைத் தூக்கி நின்று எட்டிப்பறித்து உண்டுவிடுகின்றன. இக்காரணத்தால் அதிகத் தழைகளின் சத்தும், சில சந்தர்ப்பங்களில் அரிய மூலிகைச் சத்தும்கூட வெள்ளாட்டு இறைச்சியில் காணப்பட வாய்ப்பு உண்டு.
செம்மறி ஆட்டின் மாமிசத்திலே கொழுப்புப்பொருட்கள் அதிகம் இருந்தாலும் அவை தரையில் வெறும் புற்களை மட்டுமே மேயும் தன்மையுடையவையாதலால் மேற்சொன்ன இதர தழைச் சத்துக்களைப் பெற வழியில்லை. ஆனால் இரும்புச் சத்து குறைவுள்ள நபர் களுக்கு அச்சத்தை பெற எந்த ஆட்டுக்கறியை உண்டாலும் பயனில்லை. ஏன் என்றால் ஆட்டு மாமிசத்தில் இரும்புச்சத்து இருப்பதில்லை என்பது அண்மைக்கான உணவுச் சத்து இயல் கழகத்தின் ஆய்வாகும். இந்த இரும்புச்சத்து, மாடு மற்றும் பன்றிக் கறியில் மட்டுடே அதிக அளவில் உள்ளது.
No comments:
Post a Comment